இப்படி ஒரு மனிதனா..? - விஜயகாந்த் மரணத்தில் இருந்த மறக்க முடியாத வலிகள்!
விஜயகாந்த் மறைவு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் உதாரணமாக கூறியுள்ளது.
சினிமா நடிகராக, அரசியல் தலைவராக மட்டும் இல்லாமல் பசித்தோருக்கு உணவளித்த பெரும் தலைவனாக அவரை ஒவ்வொருவரும் பார்க்கின்றனர். உயிருடன் இருக்கும்போது விஜயகாந்த் பற்றி பேசாதவர்கள், அழாதவர்கள் அவர் மறைந்ததும், கண்ணீர் விட்டு கதறினர். ரத்தம் உறவு இல்லாத, பேசி பழகிய நண்பர்களாக இல்லாத, ஒன்றாக சேர்ந்து பணிபுரியாத பலர் விஜயகாந்த் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். தர்மம் என்ற பெயருக்கு உதாரணமாக கர்ணனை கூறுவதுண்டு. அந்த கர்ணனை போல் தன்னை தேடி வருவோருக்கு அவரின் பின்புலம் பாராமல் உதவி செய்த கருப்பு வைரம் என போற்றப்படும் விஜயகாந்த் மரணம் தமிழகத்தில் பேரலையை ஏற்படுத்தியது என்றே கூறலாம். கடந்த 2 நாட்களாக தமிழக ஓயாது அடித்த விஜயகாந்தின் மரண அலையின் கண்ணீர் சிந்தும் காட்சிகள் இங்கு நினைவாக பகிர்கிறோம்.
விஜயகாந்த் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும் உடனடியாக அவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு கவுண்டமணி முதல் ஆளாக ஓடி வந்தார். திரையில் ஜாம்பவனாக இருந்த கவுண்டமணி பெரிதாக பொதுவெளியில் வருவதில்லை. ஆனால், விஜயகாந்தின் மறைவு அவரை ஓடி வரவைத்தது. அடுத்த சில மணி நேரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இனைந்து தமிழக அரசே விஜயகாந்த் உடலை பார்க்க வந்தது. பின்னர், தமிழகத்தின் அடையாளமாக திகழும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, விசிக, பாமக, தமுமுக என இன்னும் பெரிய நீண்டு கொண்டே செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்தை இறுதியாக பார்க்க ஓடி வந்தனர்.
தமிழக அரசியல் மட்டும் இல்லாமல் தேசிய அரசியல் கட்சிகளும் விஜயகாந்தை திரும்பி பார்த்துள்ளன. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர், பிறமாநில முதலமைச்சர்கள், பிற மாநில அரசியல் கட்சி தலைவர்கள் என ஒவ்வொருவரும் தங்களின் இரங்கலையும், அனுதாபத்தையும், துக்கத்தையும் பகிர்ந்து ஆதங்கப்பட்டனர். விஜயகாந்த் இறந்தார் என்ற செய்தி கேட்டதும் இரவு 10 மணியளவில் தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது உடலை பார்க்க வந்தார் நடிகர் விஜய். தலைவர் உறக்கத்தில் இர்நுத கண்ணாடி பேழை மீது கை வைத்த விஜய் மானசீகமாக விஜயகாந்துடன் உரையாடி இருப்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். பிரேமலதா உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறிவிட்டு கண்ணாடி பேழையில் இருக்கும் விஜயகாந்தை கண்சிமிட்டாமல் 10 நொடிகள் விஜய் பார்த்தது வலியின் உச்சத்தை காட்டியது.
அடுத்ததாக நேற்று காலை விஜயகாந்தின் உடல் வைத்திருக்கும் தீவுத்திடலுக்கு விரைந்த ரஜினி, தனது அன்பு நண்பரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருத்தம் தெரிவித்தார். பின்னர் கமல்ஹாசன், சீமான், என திரைத்துறையை சேர்ந்த ஒவ்வொரு ஜாம்பவான்களும் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதில் விஜய ஆண்டனி வரும்போது கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்ததால், போலீசாரின் பேரிகார்ட் மீது ஏறி குதித்து வந்து விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவர் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழைக்கு முத்தமிட்டார்.
நடிகர்கள் விஷால், சூர்யா, அஜித்,எஸ்.ஏ. சந்திரசேகர் போன்றோர் வெளிநாடுகளில் வரவில்லை என்றாலும் வீடியோ பதிவு மூலம், தொலைபேசி மூலம் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்தனர். இவர்களுக்கு எல்லாம் மேலாக கடந்த 2 நாட்களாக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கோயம்பேட்டிலும், தீவுத்திடலும் அலைக்கடலென திறந்த மக்கள் கண்ணீருடன் வாரி கொடுத்த வைரம் சாய்ந்ததே என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இறுதி ஊர்வலத்தில் வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் பூக்களை வாரி இறைத்து மீளா துயரத்தில் ஆழ்த்தி சென்ற தலைவனுக்கு விடை கொடுத்தனர். சந்தனப்பேழையில் துயில் கொண்டிருக்கும் தலைவனை பார்க்க கோயம்பேடு தேமுதிக அலுவகத்திற்கு பொதுமக்களின் கூட்டம் சென்ற வண்ணமே உள்ளது.
விஜயகாந்தின் மறைவுக்கு திரையுலகமும், பொதுமக்களும் கண்ணீர் வடித்த அதேநேரம், மக்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலாக நின்றது தமிழக அரசு. ஒரே இரவில் தீவுத்திடலில் 2000 பேர் அமர்வதற்கு ஏற்பாடு, அஞ்சலி செலுத்த வருவோருக்கு குடிநீர், கழிவறை வசதி, சார்மினா பந்தல், 3000 போலீசார் பாதுகாப்பு என அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தனது சொந்த செலவில் செய்து மக்கள் விரும்பும் தலைவனின் துக்கத்தில் பங்கேடுத்து கொண்டது.
இதோடு நின்று விடாமல், விஜயகாந்தின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், எதிர்கட்சி தலைவர்கள், அரசியல் தலைவர்கள், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போன்றோரின் முன்னிலையில் 72 குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யபப்ட்டது. இத்தனை மரியாதையும், புகழும் அவர் அரசியல் கட்சி தலைவரோ அல்லது நடிகரோ என்பதால் இல்லை, அதை தாண்டி மறைந்தவரின் நல்ல உள்ளமும், ஈகை பண்பும், பிறர் பசி போக்கிய தன்னலமற்ற குணமும் தான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.