நாகர்கோவில் காசி பாலியல் வழக்கு: வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவர் கைது
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நாகர்கோவில் காசியின் மற்றொரு நண்பரை சிபிசிஐடி போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (29)என்பவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏராளமான இளம் பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்ததோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது.
மேலும் காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடுத்தடுத்து புகார் கொடுத்தனர். இதை அடுத்து காசி மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் காசி தொடர்ந்து சிறையில் உள்ளார். அதே நேரத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் காசி மீதான பாலியல் வழக்கில் காசி நண்பர்களான இரண்டு பேர் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்தது. இதில் நாகர்கோவிலில் சேர்ந்த ஜினோ என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
மேலும் மற்றொரு நண்பரான ராமன் புதூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (43) என்பவர் வெளிநாட்டில் தொடர்ந்து 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து ராஜேஷ் தமிழகத்துக்கு வர இருப்பதாக சிபிசிஐடி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராஜேஷை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.