பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்பிலான கூப்பன்கள் கொடுக்கும் இண்டிகோ!!
விமான சேவை ரத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக இண்டிகோ நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.;
இந்தியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, மத்திய அரசின் புதிய விதிகளால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் விமானிகள் பற்றாக்குறை காரணமாக, கடந்த டிசம்பர் 2ஆம் தேதி முதல் தொடர்ந்து விமானச் சேவைகள் ரத்தாவதால் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தப் பிரச்சினை இன்று 10வது நாளாகத் தொடர்கிறது. நேற்று மட்டும் 220க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் கூடுதல் விமானங்கள் ரத்தாகும் சூழல் காணப்படுவதால், இண்டிகோ விமானப் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்தத் தொடர் சேவை முடக்கத்தால் ஏற்பட்ட சிரமங்களுக்காக இண்டிகோ நிறுவனத்தின் தலைவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும், விமானச் சேவையை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். டிசம்பர் 3 முதல் 5 வரையிலான மூன்று நாட்களில் மட்டும், விமானிகள் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற பல்வேறு காரணங்களால் 4,600க்கும் மேற்பட்ட பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் திடீர் ரத்து பொதுமக்கள் பயணத் திட்டங்களை கடுமையாகப் பாதித்தது. குறிப்பாக, திருமண மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப் புறப்பட்டவர்கள், அவசர துக்க நிகழ்வுகளுக்குச் செல்ல திட்டமிட்டவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் நேர்காணலுக்குச் செல்லத் தயாரானவர்கள் எனப் பலரும் நேரத்திற்குப் பயணிக்க முடியாமல் தவித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இண்டிகோ விமான சேவை நிறுவனத்திற்குப் பெரும் அவப்பெயரையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், டிசம்பர் 3 முதல் 5 வரையிலான காலகட்டத்தில் விமான சேவை ரத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக இண்டிகோ நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ₹10,000 மதிப்புள்ள பயணக் கூப்பன்கள் வழங்கப்படும். இந்தக் கூப்பன்களை அடுத்த 12 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்தக் கூப்பன்களுடன் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ₹5,000 முதல் ₹10,000 வரையிலான இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது. இந்த கூப்பன்களை வழங்குவதற்காக மட்டும் இண்டிகோ நிறுவனம் ₹340 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ரத்து செய்யப்பட்ட விமானங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணங்கள் எந்தவித பிடித்தமும் இன்றி முழுமையாகத் திருப்பி அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது வரை பலரது வங்கிக் கணக்கில் டிக்கெட் கட்டணம் வரவு வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டிராவல் பார்ட்னர் தளங்கள் (Travel Partner Platforms) மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் முழுமையான விவரங்கள் தங்களிடம் இல்லை என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது விமானப் பயண ரத்து தொடர்பான விரிவான விவரங்களை customer.experience@goindigo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, தடையற்ற மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த விமானப் பயண அனுபவத்தை மீட்டெடுப்பதற்கான உறுதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருப்பதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.