செப்.9ல் குடியரசு துணைத்தலைவர் தேர்தல்!!
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;
election commission
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் கடந்த ஜூலை 21மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். 74 வயதான தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்த அவர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதமும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அத்துடன் மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திரா மோடியை தேர்தல் நடத்தும் அலுவலராகவும், மாநிலங்களவை இணைச் செயலாளர் கரீமா ஜெயின் மற்றும் மாநிலங்களவை இயக்குநர் விஜயகுமார் ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. செப்.9 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே(செப்.9) வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வர். முன்னதாக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி நிறைவுபெறுகிறது.