மணிப்பூரில் கலவரம் உருவானது எப்படி? - மக்களவையில் அமித்ஷா விளக்கம்

Update: 2023-08-10 06:58 GMT

அமித்ஷா விளக்கம்

மணிப்பூரில் கலவரம் உருவானது எப்படி என்று மக்களவையில் அமித்ஷா விளக்கம் அளித்தார். முதல்-மந்திரியை மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

மக்களவையில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று 2-வது நாளாக விவாதம் நடந்தது. 

விவாதத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துவதை மத்திய அரசு தவிர்ப்பதாக பொய் பிரசாரம் நடத்தப்பட்டது. ஆனால், முதல் நாளில் இருந்தே விவாதத்துக்கு தயாராக இருந்தோம். எதிர்க்கட்சிகள்தான் விவாதம் நடத்த விரும்பவில்லை.

அவர்கள் அமளியை விரும்புகிறார்களே தவிர, ஆக்கபூர்வமான விவாதத்தை விரும்பவில்லை. நான் பேசுவதையும் விரும்பவில்லை. ஆனால், என் குரலை ஒடுக்க முடியாது.

130 கோடி மக்களும் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, நாங்கள் சொல்வதை எதிர்க்கட்சிகள் கவனிக்க வேண்டும். 

எங்கள் ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் மணிப்பூரில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமே இருக்கவில்லை. பந்த்தோ, முழு அடைப்போ நடக்கவில்லை. பயங்கரவாதம் ஏறக்குறைய முடிந்து விட்டது.

மியான்மர் எல்லையில் வேலி இல்லாததால், குகி சகோதரர்கள், மணிப்பூருக்கும், மிசோரமுக்கும் வரத்தொடங்கினர். அதுதான் மோதலுக்கு வழிவகுத்தது.

மெய்தி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்குமாறு மணிப்பூர் மாநில ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, மோதலை அதிகரித்து விட்டது.

மணிப்பூரில் இன மோதல்கள் நடந்தது என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது. அதை அரசியல் ஆக்குவது இன்னும் வெட்கக்கேடானது.

மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் செய்வதற்காக ராகுல்காந்தி மணிப்பூருக்கு சென்றார். சுரசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்லுமாறு ராகுல்காந்தியை கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் எதிர்ப்பு தெரிவித்து, சாலைமார்க்கமாக சென்றார். அதனால் மணிப்பூர் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பொதுவாக, ஒரு முதல்-மந்திரி ஒத்துழைக்காத பட்சத்தில்தான் மாற்றப்பட வேண்டும். ஆனால், மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன்சிங், மத்திய அரசுடன் ஒத்துழைத்து வருவதால், அவரை மாற்ற தேவையில்லை.

முன்பெல்லாம் எல்லைக்கு அப்பால் இருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தனர். எவ்வித எதிர்ப்பும் இன்றி, ராணுவ வீரர்களின் தலையை துண்டித்தனர்.

ஆனால், நரேந்திர மோடி அரசு வந்த பிறகு, பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை அழிக்கும் கொள்கையை கடைபிடிக்க தொடங்கியது. ஒரு தடவை, துல்லிய தாக்குதலும், மற்றொரு தடவை விமான தாக்குதலும் நடத்தப்பட்டன.

காஷ்மீரை முற்றிலும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்க மோடி அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தற்போது, காஷ்மீரில் கல் வீசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை.

முன்னாள் பிரதமர் நேருவின் தவறான கொள்கைகளின் வெளிப்பாடால்தான், அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு உருவானது. அந்த பிரிவை ரத்து செய்து, காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை பிரதமர் மோடி எடுத்தார்.

இப்போது, பயங்கரவாதிகளின் உடல்களுடன் ஊர்வலம் நடத்தப்படுவது இல்லை. அவர்கள் கொல்லப்பட்ட இடத்திலேயே புதைக்கப்படுகிறார்கள்.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ஹூரியத் அமைப்புடனோ, ஜாமியத் அமைப்புடனோ பேச மாட்டோம். காஷ்மீர் இளைஞர்களுடன்தான் பேசுவோம்.

உள்நாட்டு பாதுகாப்பை பொறுத்தவரை, நாங்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்தோம். நாடு முழுவதும் 90 இடங்களில் சோதனை நடத்தினோம்.

விவசாயிகளை பொறுத்தவரை, அதிகபட்ச அரிசியை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்த ஒரே அரசு, மோடி அரசு என்று அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

ஒருபக்கம், ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி என்ற 'லாலிபாப்' கொடுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. மறுபுறம், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கவுரவமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்திய மோடி அரசு. இதில் எது சிறந்தது என்று விவசாயிகள் தீர்மானிக்க வேண்டும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், கடன் தள்ளுபடியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கடன் வாங்கத் தேவையற்ற சூழ்நிலையை உருவாக்குவதில்தான் நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் விவசாயிகளுக்கு வழங்குவது இலவசம் அல்ல. அவர்களை சுயசார்புடன் வாழ செய்கிறோம்.

ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்குகளை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, மத்திய அரசு ரூ.1 அனுப்பினால், பயனாளிகளுக்கு 15 காசுதான் போய்ச்சேர்வதாக கூறினார். ஆனால், இன்று மொத்த தொகையும் ஏழைகளை சென்றடைகிறது.

நீங்கள் (காங்கிரஸ்) திட்டங்களை உருவாக்குவீர்கள். ஆனால் செயல்படுத்துவது இல்லை. ஜி.எஸ்.டி., நேரடி பணப்பயன் திட்டம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நீங்கள் அறிவித்து இருக்கலாம். நாங்கள்தான் வெற்றிகரமாக செயல்படுத்தினோம்.

ஊழல், குடும்ப அரசியல், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை பிரதமர் மோடி ஒழித்துக் கட்டினார். செயல்பாட்டு அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.

இந்த சபையின் உறுப்பினர் ஒருவரை அரசியலில் முன்னேற்ற 13 தடவை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 13 தடவையும் அவர் தோல்வி அடைந்தார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனவே, மோடி அரசு செய்த நல்ல காரியங்களை சொல்ல வேண்டியதாகி விட்டது.

பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியாவை மோடி அரசு 5-வது இடத்துக்கு கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடி, மீண்டும் பிரதமர் ஆவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை அடையும் என்று அமித்ஷா பேசினார்.

அமித்ஷா, 2 மணி நேரம் பேசினார். அதைத்தொடர்ந்து, மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், சபை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் விவாதம் நடக்கிறது.

Tags:    

Similar News