விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புக்கள் தானம்!
கிராமத்து தம்பதியினர் செயலால் நெகிழ்ச்சி
கோவை மாவட்டம் காளாம்பாளையம் அருகில் உள்ள செல்லப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுச்சாமி சரஸ்வதி தம்பதியினர்.இவர்களது மகன் ஸ்ரீராம் எலக்ட்ரிசியனாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை தனது நண்பர் மதனுடன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்ற பொழுது கார் மோதி விபத்தில் சிக்கினர். இதில் மதன் உயிரிழந்த நிலையில் ஸ்ரீராம் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீ ராமுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ ராம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார்.அங்கு அனுமதிகபட்ட பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் ஸ்ரீராம் உடலை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.கோவை அரசு மருத்துவமனையில் இன்று மாலை ஸ்ரீராமின் உடல்தானமாக வழங்கப்பட்டது.அவரது உடலில் இருந்து சிறுநீரகம், கண்கள் இதயம்,நுரையீரல்,கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தானமாக பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமின் உடல் இன்று காலை உறவினர்கள் பெற்றுக் கொள்ள இருக்கின்றனர்.சாலை விபத்தில் இளைஞர் மூளை சாவடைந்த நிலையில் , அவரது உடல் பாகங்கள் வேறு நபர்களுக்கு பயன்படட்டும் என்ற நோக்கில் எளிய கிராமத்து பின்னணி கொண்ட ஆறுச்சாமி சரஸ்வதி தம்பதியினர் முடிவு செய்து தங்களது மகனின் உடலை தானமாக கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.