பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா கமிட்டி கூட்டம்
தீர்மானம் நிறைவேற்றம்
செட்டிகுளத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா கமிட்டி கூட்டம் அதன் தலைவர் ராமலிங்கம் செட்டியார் தலைமையில் பிராமணர் சமுதாய அன்னதான சத்திரத்தில் நடைபெற்றது. நாராணமங்கலம் சுத்தரத்தின சிவாச்சாரியார் இறைவழிபாடு நடத்தி கூட்டத்தை தொடங்கிவைத்தார். துணைத்தலைவரும், ஓய்வுபெற்ற பத்திரப்பதிவு துறை உயர்அதிகாரி வேளச்சேரி ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கந்தசஷ்டி கமிட்டி செயலாளராக பலஆண்டுகளாக பணிபுரிந்து ஆன்மீக மற்றும் அறப்பணிகள் செய்து சமீபத்தில் மறைந்த டோல்கேட் கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது சேவைகளை நினைவுக்கூர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தம் தீட்சதர், கமிட்டி இணைச்செயலாளர் குயிலன், ஓய்வுபெற்ற தாசில்தார் முசிறி பாலசுப்மணியன்,பட்டி மன்ற பேச்சாளர் கேசவ ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பேசினார்கள். கமிட்டியின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற தாசில்தார் மகேஸ்வரன், பொருளாளராக செட்டிகுளம் தனராஜ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்கூட்டத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் தமிழகஅரசின் உதவியுடன் பக்தர்கள் பங்களிப்புடன்கூடிய திட்டத்தில் ரூ.65 லட்சம் செலவில் கந்தசஷ்டி கமிட்டி சார்பில் அன்னதான கூடம் கட்டுவது தீர்மானிக்கப்பட்டது. முடிவில் துணைச்செயலாளர் நாட்டார்மங்கலம் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.