மின்சாரம் தாக்கி மகன் கண்முன்னே தந்தை பலி!
அணைக்கட்டு அருகே மின்சாரம் தாக்கி மகனின் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் மேல்அரசம்பட்டு அருகே பங்களாமேடு கிராமத்தில் திருக்குமரன் என்பவரின் விவசாய நிலத்தில் மின்கம்பம் ஒன்று அடியோடு சாய்ந்தது. இதனால் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து பார்வையிட்டு விரைவில் சரிசெய்து கொடுப்பதாக கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு வாரமாகியும் மின்கம்பத்தை சீரமைக்காமலும், முறையான மின்சாரம் வழங்காததாலும் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவித்து வந்தனர். எனவே சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்கும் நோக்கத்தோடு அப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து மின் கம்பி செல்லும் இடத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றி மின்சார கம்பியை சீரமைக்க காத்திருந்தனர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சேட்டு என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது மகனுடன் மின்கம்பத்தின் அருகே சென்றுள்ளார்.அப்போது மின்கம்பத்தை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து மகன் கண்முன்னே ஜெயக்குமார் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நாங்களே மின் கம்பத்தை சீரமைக்க மரக்கிளைகளை வெட்டி அகற்றி மின்சாரம் கொடுக்கும் நேரத்தில் இந்த சம்பவம் ஏற்பட்டது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். எனவே இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.