திண்டிவனம் அருகே அதிகளவு போதை ஊசி போட்டுக்கொண்ட வாலிபர் இறப்பு
போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்திநகரை சேர்ந்தவர் அய்யனார் மகன் அப்பு(வயது 23). இவரது மனைவி சினேகா(20). இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையில் அப்பு வேலை செய்து வந்தார். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். காலையில் நண்பர்களுடன் வெளியில் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு அப்பு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் மாலை 4 மணியாளவில் காந்தி நகர் எதிரில் உள்ள முட்புதரில் அப்பு மயங்கிய நிலையில் கிடந்தார்.இது பற்றி தகவல் அறிந்ததும் அவரது குடும்பத் தினர் மற்றும் நண்பர்கள் விரைந்து சென்று அப்புவை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அப்பு இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது பற்றி அறிந்ததும் ரோசனை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அப்பு போதை ஊசி பயன்படுத்துவார் என்றும், அதிக அளவில் போதை ஊசி போட்டுக்கொண்டதால் இறந்திருக்கலாம் என்றும் தெரிந்தது. இதனிடையே அப்புவின் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அதிக அளவு போதை மருந்து ஏன் கொடுத்தாய்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.