சேலத்தில் லாரி டிரைவரிடம் லஞ்சம் பெற்றதாக வீடியோ பரவல்
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம் போலீஸ் கமிஷனர் அதிரடி
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ராமன் பணியாற்றி வந்தார். இவர் காட்டுபாளையம் என்ற இடத்தில் ஏட்டு ராமச்சந்திரனுடன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அவர்கள் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் லாரி ஒன்றை நிறுத்தி டிரைவரிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அதிகாரிகள் விசாரணை நடத்தி போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமன், ஏட்டு ராமச்சந்திரன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அதிரடியாக உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.