திருப்பூர், பெருமாநல்லூரில் உள்ள உத்தமலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் பூதேவி சமேத ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

திருப்பூர், பெருமாநல்லூரில் உள்ள உத்தமலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் பூதேவி சமேத ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-08-28 11:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூரில் கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில்  மகா கும்பாபிஷேக விழா மற்றும் மகா சம்ப்ரோஷன விழா இன்று நடைபெற்றது. இதற்காக ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூரில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரியை  ஊர்வலமாக எடுத்து வந்தனர். கடந்த 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை கோ பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தீர்த்தஸ்தங்கிரஹணம் என்கிற புனித நீர் எடுத்து வரப்பட்டு முதற்கால யாக பூஜை நடைபெற்றது. 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரண்டாம், மூன்றாம் காலை யாக பூஜையும் நடைபெற்றது. அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை  நான்கு, ஐந்தாம் கால யாக பூஜை , உபச்சாரம் தீபாதாரணை நடைபெற்றது. இன்று அதிகாலை ஆறாம் கால யாக பூஜை நடைபெற்று  கலசங்கள் புறப்பாடு மற்றும் முலாலய விமானங்கள் பரிவார விமானங்களுக்கும், மூலவர் மற்றும் பரிபார தெய்வங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேக மற்றும்  சம்ப்ரோஸ்ண விழா   காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கும், காலை 9.05 மணி முதல் 9 25 மணிக்குள் கோவர்த்தினாம்பிகை  உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னதாக இந்த கும்பாபிஷேக விழாவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சிவாச்சாரியார்கள் வருகை புரிந்து கலசங்களுக்கு அபிஷேகம் சிறப்புபூஜைகள் செய்தனர். இதற்காக இரண்டு யாகசால பூஜை மடங்கள் அமைக்கப்பட்டன. பல்வேறு யாகசாலை பூஜைகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பிறகு தீர்த்தநீரானது பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டன. இந்த மகா கும்பாபிஷேக விழாவினை யொட்டி கொண்டத்து காளியம்மன் கோவில் திடலில், பொது மக்களுக்கு அன்னதானம் காலை ஏழு மணி  முதல் தொடர்ந்து  வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவினை யொட்டி தினந்தோறும் இரவு 9 மணிக்கு   வள்ளி கும்மி ஆட்டம், முளைப்பாரி எடுத்து வருதல், பெருஞ்சலங்கையாட்டம், கம்பத்தாட்டம், அழகு வள்ளி கும்மியாட்டம், இன்னிசை பாட்டு மன்றம், நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று மாலை மகா அபிஷேகம்,பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் கும்பாபிஷேக விழா நிறைவு பெறுகிறது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் மற்றும் கோவில் மிராசுகள் ஏற்பாடு செய்திருந்தனர். மிகச் சிறப்பாக முறையில் நடைபெற்ற இந்த விழாவானது பக்தர்களின் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News