உடுமலை அருகே காட்சி பொருளாக உள்ள சோதனை சுவாடி
காவலர்கள் நியமிக்க கோரிக்கை
உடுமலை அருகே கோவை- திருப்பூர் மாவட்ட எல்லையில் உடுமலை-ஆனைமலை பிரதான சாலையில் தேவனூர் புதூர் ஊராட்சி உள்ளது.இரண்டு மாவட்ட எல்லை என்பதால் குற்றச் செயலில் ஈடுபடும் ஆசாமிகள் எளிதில் தப்பித்து அண்டை மாவட்டத்திற்கு சென்று விடுவது வாடிக்கையாக இருந்து வந்தது.இதன் காரணமாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி ஆசாமிகளை கைது செய்வதில் தடங்கல்கள் ஏற்பட்டு வந்தது. மேலும் கனிம வளங்கள் கடத்தலும் நிகழ்ந்து வந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டது.அத்துடன் இரண்டு மாவட்டங்களின் அண்டை கிராமத்தில் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. அதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தேவனூர் புதூர் அருகே போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.அதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் குற்றச்செயல்களும் குறைந்து வந்தது.பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.ஆனால் கடந்த சில மாதங்களாக சோதனை சாவடி செயல்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இரண்டு மாவட்டங்களின் எல்லையில் உள்ள பொதுமக்கள்,கனிம வளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைக்கப்பட்ட சோதனை சாவடி கேட்பாரின்றி கிடக்கிறது.அதில் நியமிக்கப்பட்ட காவலர்கள் என்ன ஆனார்கள்.ஏன் வாகன சோதனை நடத்தாமல் சோதனைச் சாவடி மூடி வைக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் வீணாகி உள்ளது.எனவே தேவனூர்பூதூர் பகுதியில் செயல்படாமல் உள்ள சோதனைச் சாவடியில் போலீசாரை நியமித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.