மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் மனுக்களை அளிக்க குவிந்த மக்கள்!!
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 616 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கடந்த மாதம் கர்நாடகா மாநிலம், வட கன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் குறுவட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த .சின்னன்னன் அவர்கள் மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாப்பிநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் அவர்களின் வாரிசுதாரர்கள் 2 நபர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுவை பெற்று கொண்டு, மாற்றுத்திறனாளி பழனியாண்டி அவர்கள் காது கோளாதவர்களுக்கான கருவி வழங்க வேண்டி அளித்த மனுவின் அடிப்படையில் உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ரூ.2,800/- மதிப்பிலான காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவியையும், 1 மாற்றுத்திறனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், ஆவின் பொது மேலாளர் .ஆர்.சண்முகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.