மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 272 மனுக்களை பெற்றுக் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 272 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இன்றைய கூட்டத்தில், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடனுதவியாக 6 பயனாளிகளுக்கு பெட்டிக்கடை வைக்க தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.3.00 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள், இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சியரின் கைப்பேசிக்கு வாட்ஸ்அப் வாயிலாக பெறப்பட்ட மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியின்பேரில் சம்பந்தப்பட்ட பயனாளிக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சி, தோப்புப்பட்டியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை, முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக 14.08.2024 அன்று திறந்து வைத்தார்கள். அதையடுத்து சமுதாயக்கூடத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக ஸ்ரீஅம்மன் மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் சமுதாயக்கூடத்தின் சாவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுபாஷினி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, துணை ஆட்சியர் பயிற்சி செல்வி ராஜேஸ்வரி சுவி, மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மாவட்ட மேலாளர் முகைதீன் அப்துல்காதர், உதவி ஆணையாளர் கலால் பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.