திமுக ஆட்சியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் பெருமிதம்
திமுக ஆட்சியில்தான் கிராமப் புறங்களில் வளர்ச்சிப் பணிகள் பெருமளவில் நடைபெறுகின்றன என்று சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில்தான் கிராமப் புறங்களில் வளர்ச்சிப் பணிகள் பெருமளவில் நடைபெறுகின்றன என்று சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தெரிவித்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் எட்டயபுரத்தில் நேற்று நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய திமுக செயலர் அ. நவநீத கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன், பேரூராட்சித் தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அமைச்சர் பி. கீதா ஜீவன் பேசியது: 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்காக அறிவித்துள்ளார். அதனை நோக்கி நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். எந்தக் கட்சி வந்தாலும், திமுகவின் வாக்கு வங்கி குறைய வாய்ப்பே இல்லை. மக்களை தேடி வந்து ஆட்சியர்கள், அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். திமுக ஆட்சி வந்த பின்னர்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து கிராமப்புறங்களிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் நமது களப்பணிகள் இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கடலையூரை சேர்ந்த அதிமுக கிளை செயலர்கள் பாலாறு, சக்தி வேலன் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். இதில், எட்டயபுரம் பேரூர் செயலர் பாரதி கணேசன், திமுக ஒன்றியச் செயலர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், ஊராட்சித் தலைவர் சிந்தலக்கரை சாமி சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.