வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்.
வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். பள்ளிக், கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து சிறைபிடிக்கப்பட்டதால் வகுப்புக்கு செல்ல தாமதம் ஏற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாணவர்கள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் தும்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட மிட்னாங்குப்பம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படாததால் பலமுறை ஊராட்சி நிர்வாகத்தை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், முறையான குடிநீர் வழங்க கோரி தும்பேரி கூட்டு சாலை சந்திப்பில் காலி குடங்களுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேருந்தில் பயணித்த பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு வகுப்புக்குச் செல்ல காலதாமதம் ஆவதால் பேருந்தை விடுவிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நாட்றம்பள்ளி உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு தலைமையில் அதிகாரிகள், வருவாய்த்துறையினர், அம்பலூர் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேருந்தை சிறைபிடித்து போராட்டக்காரர்கள் போராட்டதால் மாணவர்கள் இன்று பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.