குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள முள்ளபழஞ்சி விளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (70). இவர் நேற்று மேல்புறம் பகுதியில் இருந்து மருதங்கோடு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற வாலிபர் ஒருவர் எதிர்பாராத விதமாக குமரேசன் மீது மோதி தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் அருமனை போலீசார் சம்பவ இடம் சென்று பலியான குமரேசனின் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது அருமனை அருகே அண்டுகோடு பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் மகன் ஆக்சில் (19)என்பது தெரிய வந்தது. இதை எடுத்து போலீசார் ஆக்சில் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் அங்கு வீட்டில் இல்லை. மேலும் விசாரித்ததில் ஆக்சில் ஓட்டுநர் உரிமை இன்றி பைக்கை ஒட்டி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் மிகவும் நவீனப்படுத்தப்பட்ட அந்த பைக்கை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் தலைமறைவான ஆக்சிலை போலீசார் தேடி வருகின்றனர்.