வேட்டையன் படத்தில் சர்ச்சை காட்சியை நீக்காவிட்டால் போராட்டம்
வேட்டையன் படத்தில் சர்ச்சை காட்சியை நீக்காவிட்டால் போராட்டம்: கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தில் கோவில்பட்டி பள்ளி குறித்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்பு கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ அளித்த பேட்டியில், "வேட்டையன் படத்தில் கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி குறித்து தவறாக சித்திரிக்கப்பட்டு இருப்பதாக மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் என்னிடம் தெரிவித்தனர். அந்தப் பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்தது. நான் அமைச்சராக இருந்த போது அதனை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியிருந்தேன். மேலும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளும் அந்த பள்ளிக்கு செய்து கொடுத்திருக்கிறேன். இது சிறப்பான பள்ளி. பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரும் பள்ளி. இந்த நிலையில் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்களின் மனதை வேதனைப்படுத்தும் வகையில் உள்ளது. இதுகுறித்து வேட்டையன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், லைக்கா நிறுவனத்தின் நிர்வாகியுமான தமிழ்குமரனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளேன். இதுகுறித்து இயக்குனரிடம் தெரிவித்து அந்த காட்சியை விரைவில் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளனர். அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். இன்றைக்குள் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பொது மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.