கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம்!
கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திப்புதோப்பு சாலையில், நெல்லை தமிழ் பாப்டிஸ்ட் அறக்கட்டளைக்கு சொந்தமான 4.54 ஏக்கர் சொத்துகளை தமிழ் பாப்டிஸ்ட் மிஷன் சங்கத்தின் பெயருக்கு மற்றம் செய்ததை எதிர்த்து கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து நெல்லை தமிழ் பாப்டிஸ்ட் அறக்கட்டளை சபை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் மற்றும் வக்பு வாரிய சட்டம் ஆகியவற்றைப் போல், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் கிறிஸ்தவ நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்ற அனுமதி பெறாமல் பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த மோசடிக்காக கோவில்பட்டி சிறப்பு வட்டாட்சியர் மற்றும் தமிழ் பாப்டிஸ்ட் மிஷன் சர்ச் அறக்கட்டளை செயலாளருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்