வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-11-23 13:51 GMT
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், சூரியக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சங்ககிரி மேற்கு, சங்கர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குசாவடி மையங்களில் இன்று நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி-2025 ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய தினம் 16.11.2024 தொடங்கி 17.11.2024 (ஞாயிற்றுகிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இன்றைய தினம் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றும், 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்த்தல் மற்றும் பட்டியலில் புகைப்படம், குடியிருப்பு முகவரி திருத்தம் செய்தல், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற உரிய விண்ணப்பங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பித்து வருவதையும், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் போதுமான அளவு விண்ணப்பங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்தில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 30.09.2007 வரை பிறந்தவர்கள், 01.04.2025, 01.07.2025 மற்றும் 01.10.2025 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-இல் விண்ணப்பிக்கலாம். அவர்களது பெயரானது 18 வயது நிரம்பியவுடன் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். மேலும் Voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், "Voter helpline" என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து, மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உணவு கூடம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவேடு பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த உணவின் தரத்தினை உண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டதை அடுத்து, அதற்கு ஈடுசெய்யும் வகையில் இன்றைய தினம் பள்ளி செயல்பட்டு வருவதை பார்வையிட்டு, பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுடன் தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வி பயில செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

Similar News