ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. சமீப காலமாக ஈரோடு வழியாக வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஈரோடு ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அசாம் மாநிலம் திப்கருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரெயில் சேலம் வழியாக ஈரோடு ரெயில் நிலையம் வந்தடைந்த போது ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.அப்போது எஸ்.6 முன்பதிவு பெட்டியில் கழிவறை அருகே சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த இரு பைகளை போலீசார் சோதனை செய்த போது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.இதன் பின்னர் கஞ்சாவை கொண்டு வந்த நபர் யார் என்பது தெரியாததால் ரெயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து ஈரோடு மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இந்த மாதத்தில் இரண்டாவது முறை என கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த மொத்தம் 15கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.