அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில், விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக உள்துறை செயலாளர் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் சிசிடிஎன்எஸ் முறைப்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் பதிவிறக்கம் ஆகாமல் தடுக்கப்பட்டுவிடும். ஆனால் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகிவிட்டது. இருப்பினும் உடனடியாக அது முடக்கப்பட்டு விட்டது. இடைப்பட்ட நேரத்தில் 14 பேர் சிட்டிசன் போர்ட்டலில் இருந்து இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை எடுத்து பகிர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் தகவல் அறிக்கையை காவல் துறை கசியவிடவில்லை. இதுவரை நடந்த விசாரணையில், ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணையர் தெரிவித்தாரே தவிர, ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று முடிவுக்கு வரவில்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. அதிகாரிகள் பணி விதிகளின்படி, காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க எந்த தடையும் இல்லை. முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் ஆணிவேர் வரை விசாரணை நடத்தப்படும் என்று வாதிட்டார். அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம்தான் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பில் உள்ள வளாகத்துக்கு அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 988 கேமராக்கள் உள்ளன. அதில் 849 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் முழுவதும் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படிப்பை மேற்கொள்ளலாம் என்றார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில், கைது செய்யப்பட்டுள்ள நபர் துணை முதல்வர் உடனும், அமைச்சருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி அவர் திமுக நிர்வாகி என்று வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஒரு நிகழ்வுக்கு செல்லும்போது புகைப்படம் எடுத்துக் கொண்டால் அதை வைத்து எப்படி முடிவுக்கு வர முடியும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டனர். அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையில் ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவர் என அறிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த காவல் துறை ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பை தொடர்ந்து முடிக்க அனுமதிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டனர். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை மேம்படுத்த கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவி மற்றும் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.