புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் தபால்துறை அறிமுகம்

சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்

Update: 2025-01-10 03:38 GMT
சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐ.பி.பி.பி.), பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555 மற்றும் ரூ.755 பிரீமியத்தில், ரூ.10 லட்சம் மட்டும் ரூ.15 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு திட்டம் மற்றும் ஆண்டிற்கு ரூ.899 பிரீமியத்தில் ரூ.15 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து மக்களுக்கும் விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் மிக குறைந்த பிரீமிய தொகையுடன் கூடிய இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விண்ணப்ப படிவம், அடையாள மற்றும் முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர்கள் மூலம் ஆன்ட்ராய்டு போன் மற்றும் விரல் ரேகை கருவி உதவியுடன் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது. தற்போது காப்பீடு செய்து கொள்ளாத வாடிக்கையாளர்கள் இதில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் ஆரோக்கியமாக உள்ளவர்கள் மட்டும் இந்த மருத்துவ காப்பீட்டில் சேர முடியும். ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தபால் நிலையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலமாக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News