சென்னையில் முகாம்

சென்னையில் முகாமிட்டிருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று மாலைக்குள் முடிவு தெரியும் என தகவல்

Update: 2025-01-10 03:41 GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது திமுகவா அல்லது அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸா என குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் இன்று (10ம் தேதி) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடை நாள் 17ம் தேதி ஆகும். இருப்பினும், பொங்கல் விடுமுறை வருவதால், 10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை ஏற் பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் பெற வேண்டும் என்பதில், காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது. அதாவது, காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் தாங்கள் களம் இறங்க, அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விருப்பம் தெரிவித்திருந்தார். இது ஒருபுறமிருக்க, கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது திமுகவா அல்லது காங்கிரஸா என முடிவு தெரியாத நிலையில், காங்கிரஸ்க்கு கிடைத்து விடும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இதனால், அக்கட்சியைச் சேர்ந்த மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத், தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளருமான ஆர்.எம்.பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா சென்னையில் முகாமிட்டுள்ளனர். இருப்பினும், தமிழ்நாடு அரசின் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இடையேயான ஆலோசனைக்கு பிறகே, அத்தொகுதி யாருக்கு ஒதுக்கப்படுகிறது? வேட்பாளர் யார்? என்பது தெரிய வரும். அநேகமாக, இன்று மாலைக்குள் ( 10ம் தேதி), ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது யார் என்பது குறித்து முடிவு தெரிந்து விடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Similar News