தபால் ஓட்டு

85 வயதுக்கு மேற்பட்டோர் – மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம் தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் அறிவிப்பு

Update: 2025-01-10 03:55 GMT
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குகள் செலுத்தலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஓட்டுச் சாவடிக்கு சென்று வாக்கு அளிக்க முடியாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஓட்டுக்களை தபால் மூலம் செலுத்தலாம்.இதற்காக, தொகுதிக்கு தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களுக்கு 15.01.2025-க்கு முன் இதற்கான படிவம் - 12டி வழங்கி ஒப்புதல் பெற உள்ளனர். சம்மந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லையெனில், இரண்டாவது முறை நேரில் சென்று வழங்கி ஒப்புதல் ப பெறுவார்கள் இதன் பின்னர், இவ்வாக்காளர்கள் வீட்டிலிருந்தவாறே வாக்களிக்க ஏதுவாக வாக்காளரின் குடியிருப்பு பகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் வருகை தரும் நாள் மற்றும் நேரம் குறித்து, வெகு முன்னராகவே 12டி படிவத்தில் வாக்காளர் தெரிவித்த அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அலைபேசி எண் குறிப்பிடாதவர்களுக்கு அ ஞ்சல் மூலமாக அல்லது சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அவ்வாறு குறிப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர் குழு வாக்காளர் வீட்டுக்குச் சென்று வாக்காளர் அடையாளத்தை சரிபார்த்து, அவ்விபரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பம்/கைரேகை பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி, அஞ்சல் வாக்குச்சீட்டினை வழங்குவார்கள். வாக்காளர் கண்பார்வையற்று அல்லது உடல்நலிவு காரணமாக வாக்களிக்க இயலாத நிலையிலிருப்பின், அவரது சார்பில் கட்சி சார்பற்ற வயது வந்த ஒருவரை, வாக்களிப்பு குறித்து ரகசியம் காப்பு உறுதிமொழி பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். முதல் முறை வாக்காளர்களின் வீட்டுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் செல்லும் போது, அவர் அங்கு இல்லை என்றால், இரண்டாவது வருகை குறித்து தகவல் அளித்து வாக்கச்சாவடி நிலை அலுவலர், வாக்காளரின் அஞ்சல் வாக்குப்பதிவினை பெற வருவார். அப்போது, வாக்காளர் வீட்டில் இல்லையெனில், இதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, அவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகலினை அளிக்கவேண்டும். இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதுமிருப்பின் இவ்வலுவலக தொலைபேசி எண் 0424-–2251617யை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News