மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

Update: 2025-01-10 07:11 GMT
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, அனைத்து இணையவழி சான்றுகள், பட்டா மாற்றம், நீண்ட கால முன்மொழிவு நிலுவைகள், நிலுவை மனுக்கள், நில நிர்வாகம் தொடர்புடைய நீதிமன்ற வழக்குகள், பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம், விலையில்லா வேட்டி சேலை விநியோகம், தடையின்மைச் சான்று, தமிழ் நிலம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட வருவாய்த் துறை சார்ந்த பல்வேறு பொருட்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வில் நிலுவை மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பணிகளில் தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவைக் கோப்புகளை விரைவாக முடித்து சம்பந்தப்பட்ட துறை பிரிவுகளுக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும். சான்றிதழ் வழங்குதல், பட்டா மாற்றம் உள்ளிட்ட பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சார் ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News