பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மற்றும் மலையாள திரை உலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் (80) நேற்று காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. காலனி ஆட்சி காலத்தில் இருந்த கொச்சி சமஸ்தானத்தின் ரவிபுரம் என்ற ஊரில், நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஜெயச்சந்திரன் திரை இசை பின்னணி பாடகர்களில் தனித்துவம் பெற்று விளங்கியவர். தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்து, இன்றும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. மலையாள திரைப்படங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கடந்த 1958 ஆம் ஆண்டில் பாடகர் கே.ஜே.ஜேசுதாசன் இளைஞர் விழாவில் பங்கேற்று பாடி, பாராட்டுதல்களை பெற்றவர். மேலும், தேசிய அளவில் சிறந்த பாடகர் என்ற விருது பெற்ற ஜெயச்சந்திரன், கேரள அரசின் விருதுகள் ஐந்து முறையும், தமிழ்நாடு அரசிடம் இரண்டு முறை விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர். சேர்ந்திசை மேதை கலைஞர் எம்.பி.சீனிவாசன் குழுவில் இணைந்து செயல்பட்டவர். முன்னணி இசை அமைப்பாளர் அனைவரது இசையிலும் பாடல்கள் பாடிய பெருமைக்குரியவர். அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.