சேலத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலெக்டர் பிருந்தாதேவி ஆலோசனை
கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
சேலத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலெக்டர் பிருந்தாதேவி ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான இடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு முன்னிலை வகித்தார். இதில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்காக காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் விவாதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திட வேண்டும். கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டும் இடங்கள் தேர்வு செய்யப்படுவதால் அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தினார்.