தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக போலீசார் இல்லாததால் அடிக்கடி பல்வேறு அடிதடிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் வாலிபர் ஒருவரை 5க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மத்தியபாகம் காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையமாக இருந்தபோது புறக்காவல் நிலையத்தில் 5க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தனர். தற்போது ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் பல ஆண்டுகளாகியும் போதிய அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இதனால் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக பொதுமக்கள், பயணிகள் கூறுகின்றனர். எனவே பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையத்தில் போதுமான அளவு காவலர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,க்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.