தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சிக்குழு உறுப்பினர் பெ.பாரத ஜோதி தலைமை வகித்தார். பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புறப் பாடல்கள், கோலப்போட்டிகள், கயிறு இழுத்தல், உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மொழிப்புல முதன்மையர் ச.கவிதா வாழ்த்திப் பேசினார். முன்னதாக மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன் வரவேற்றார். நிறைவாக புலவிருந்தகக் காப்பாளர் வ.வசந்தராஜா நன்றி கூறினார். இந்நிகழ்வில் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மருதுபாண்டியர் கல்லூரி இதேபோல, தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் சனிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா கல்விநிறுவங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினர். பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து, சமத்துவப் பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். மாணவர்கள் பங்கேற்ற கரகாட்டம், நாட்டுப்புறப்பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக துணைமுதல்வர் ரா. தங்கராஜ் வரவேற்க, தமிழ்த்துறைத் தலைவர் வீ. வெற்றிவேல் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் செய்திருந்தார்.