தந்தை பெரியாரை அவமதிக்கும் விதமாக பேசியதாக சீமான் மீது தஞ்சாவூர், பட்டுக்கோட்டை காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தந்தை பெரியார் குறித்து அவமதிக்கும் விதமாகவும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தவறான தகவலை பரப்பும் விதமாகவும் பேசியதாகக் கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. அமர்சிங் வியாழக்கிழமை புகார் செய்தார். இதன் பேரில், சீமான் மீது காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோல, பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பகுத்தறிவாளர் கழக நகரத் தலைவர் ரத்தினசபாபதி அளித்த புகாரின் பேரிலும் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.