பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள், ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் திடீர் தீ விபத்தினால் வீடுகள் இழந்த 2 நபர்களின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை உடனடியாக வழங்கினார்.இராசிபுரம் வட்டம், கார்கூடல்பட்டி, பிட் 1 கிராமம், மெட்டாலா, புதுக்காலனி அருந்ததியர் தெரு என்ற முகவரியில் வசித்து வரும் கண்ணன் (45) த/பெ கோவிந்தசாமி, என்பவரின் கூரை வீடு 10.01.2025 அன்று அதிகாலை சுமார் 1:30 மணி அளவில் கூரை வீடு தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து விட்டது. மேலும், தும்மங்குறிச்சி கிராமம், அருந்ததியர் காலனியில் வசிக்கும் ஜோதி (க-பெ.முருகேசன்) என்பவரின் அட்டை வீடு 10.01.2025 அன்று இரவு சுமார் 8.30 மணியளவில் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. மேற்படி தீ விபத்தினால் அனைத்து பொருட்கள் மற்றும் மேற்கூரை (அட்டை) எரிந்துவிட்டது. மேற்படி சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை உடனடியாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தொடர்ந்து, சேந்தமங்கலம் வட்டம், நடுக்கோம்பை நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நடுக்கோம்பை கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மருந்தகத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் விவரம், தினசரி சிகிச்சை பெரும் கால்நடைகளின் விவரம், கால்நடைகளுக்கான மருத்துவ வசதிகள், மருந்து பொருட்கள் இருப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். பழங்குடியினர் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.14.70 இலட்சம் மதிப்பில் மயான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக, இராசிபுரம் தேவி திரையரங்கத்திற்கு உரிமம் புதுப்பித்து வழங்குவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது வட்டாட்சியர்கள் சீனிவாசன் (நாமக்கல்), சரவணன் (இராசிபுரம்), வெங்கடேஸ்வரன் (சேந்தமங்கலம்) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.