மோட்டார் பைக் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி
ஸ்ரீவைகுண்டம் அருகே மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சுடலை (55). கூலிதொழிலாளியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கால்வாய் கிராமத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பொன்னங்குறிச்சி பகுதியில் சென்றபோது பின்னால் தென்காசியை சேர்ந்த பால்சாமி மகன் வேல்சாமி (40) என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதமாக சுடலை மீது பயங்கரமாக மோதியது. இதில் சுடலை தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து வந்தனர். சுடலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.