ஜெயங்கொண்டம் அருகே கே கே சி நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பகுதி மக்கள் கோரிக்கை

ஜெயங்கொண்டம் அருகே கே கே சி நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-02-05 07:46 GMT
அரியலூர், பிப்.5- ஜெயங்கொண்டம் கே.கே.சி.நகரில் சாலையோரத்தில் திறந்தவெளியில் கழிவுநீர் ஓடுவதால் சுகாதாரத் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வடிகால் வசதி அமைக்க கோரி நகராட்சியில் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட கே.கே.சி. நகர் உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே அப்பகுதியில் கழிவுநீரானது வாய்க்கால் வழியாக சென்று கொண்டிருந்தது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அந்தப் பகுதியினை ஒட்டி புதிதாக ஸ்டாலின் நகர் என்று உருவாகி அங்கும் குடியிருப்பு மனைகள் கட்டப்பட்டுள்ளதால் கழிவு நீர் செல்வதற்கு தடை ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று ஸ்டாலின் நகர் தரப்பில் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வடிகால் வசதி கட்டுவதற்கு ரூபாய் 13 லட்சம் பணம் கட்டியதாகவும், ஆனால் நகராட்சி தரப்பில் அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி கட்டுவதற்கு இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் தற்போது கழிவுநீரானது கே கே சி நகர் மற்றும் ஸ்டாலின் நகரை ஒட்டி உள்ள சாலையில் திறந்தவெளியில் கழிவு நீர் ஆங்காங்கே செல்கிறது. மேலும் குடியிருப்பு பகுதியை ஒட்டி குளம் போல் கழிவு நீர் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் அச்சாலையில் கழிவு நீரின் துர்நாற்றம் கடுமையாக வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். மேலும் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பு ஏற்பட்டு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை ஜெயங்கொண்டம் நகராட்சியிடம் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கே.கே.சி. நகரில் வடிகால் வசதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அடுத்த கட்டமாக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த போவதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News