திருவள்ளூரில் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்
போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தினை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;
திருவள்ளூர் மாவட்டத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தினை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை மகளிர் விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த வழக்குகளை புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்சோ வழக்குகளின் பிரத்யேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்குகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் போக்சோ வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட உள்ளன இந்த புதிய நீதிமன்றத்தின் முதல் வழக்கு விசாரணையை நீதிபதி சரஸ்வதி விசாரித்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள், மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.