பிடிக்க தீவரம்
நம்பியூர் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட 4 பேர் கைது மேலும் 3 பேரை பிடிக்க தீவிரம்;

திருப்பூர் அருகே உள்ள திருமுருகன் பூண்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவர் பசும்பொன் தேசிய கழக கட்சியின் திருப்பூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்த வேமாண்டம்பாளையம் அருகே உள்ள கரடி கோவிலுக்கு வந்துள்ளார். இவருடன் 5 கார்களில் கட்சியை சேர்ந்தவர்களும், நண்பர்களும் வந்துள்ளனர். நம்பியூரை அடுத்த வாலியூர் கரட்டுப்பாளையம் அருகே வந்தபோது இவர்கள் வந்த கார் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயம் அடைந்தனர். மேலும் அந்த காரில் வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்தவர்களுக்கும் காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் காரில் வந்த கும்பல் கரட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்கியது. இதில் இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 5 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், திருமுருகன் பூண்டியைச் சேர்ந்த கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு துணைச் செயலாளரான சுதேஷ் குமார் (24), முகிலன் (25), திவீஸ் குமார் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.