ஏற்காட்டில் ஆங்கில ஆசிரியரை நியமிக்கக்கோரி பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர் தர்ணா
குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றதால் பரபரப்பு;
ஏற்காடு மாரமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட சின்னமதூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 46 மாணவிகளும், 54 மாணவர்களும் படித்து வருகின்றனர். தமிழ், கணக்கு, ஆங்கிலம் போன்ற பாடப் பிரிவுகளுக்கு தற்காலிக ஆசிரியர் 6 பேரும், நிரந்தர ஆசிரியர் ஒருவரும், தலைமை ஆசிரியர் ஒருவரும் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஹரிஹரன் என்பவர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்றும், கடந்த மாதம் 2-ந் தேதி மட்டுமே பள்ளிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் நேற்று காலை குழந்தைகளை வகுப்பறைக்கு அனுப்ப மறுத்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சத்யராஜ் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடையாத பெற்றோர் பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். பள்ளிக்கு நிரந்தர ஆங்கில ஆசிரியர் வரும் வரை குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் அவர்கள் தெரிவித்தனர். ஏற்காடு போலீசார் அங்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் அவர்கள் சமாதானம் அடையாமல் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் பேசிய பொறுப்பு தலைமை ஆசிரியர், உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் பள்ளியில் நிரந்தர ஆங்கில ஆசிரியர் அமர்த்தப்படுவார் என உறுதி அளித்தார். அப்படி இருந்தும் பள்ளிக்கு நிரந்தர ஆங்கில ஆசிரியர் வரும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என அவர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.