சேலம் அருகே ரெயிலை கடத்துவதாக மிரட்டல் விடுத்த வாலிபர்
போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.;
சேலம் சூரமங்கலத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மொரப்பூருக்கு வந்து செல்லும் ரெயிலை கடத்த உள்ளேன் என்றும், முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என்று மிரட்டும் வகையில் பேசிவிட்டு இணைப்பை அதிரடியாக துண்டித்துவிட்டார். இதனால் இரவு நேர பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபானி மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு வந்த செல்போன் எண்ணை வைத்திருந்த அந்த நபர் யார்? எங்கு இருந்து பேசினார்? என்பது குறித்து உடனடியாக விசாரித்தனர். அதில், அந்த நபர் பேசிய செல்போன் சிக்னலில், ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சேலத்தில் இருந்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நின்றபோது, அதில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் 3-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரெயில்வே போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், தர்மபுரியை சேர்ந்த சபரிஷான் (வயது 25) என்பதும், இவர், விளையாட்டாக ரெயிலை கடத்துவதாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.