பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-08-01 12:41 GMT
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ‌மாவட்ட ஆட்சியர் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் தோளூரில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் மற்றும் தோளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவினை ருசித்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், தோளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, மோகனூர் வட்டம் தோளூரில் ரூ.13.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உரக்கிடங்கு கட்டுமான பணிகளையும், அதே பகுதியில் ரூ.6.80 இலட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், ரூ.21.85 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டு வருவதையும், கே.புதுப்பாளையம் ஊராட்சி நாற்றங்கால் உற்பத்தி பண்ணையில் ரூ.10.27 இலட்சம் மதிப்பீட்டில் 25,000 எண்ணிக்கையில் நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும், புதுப்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.06 இலட்சம் மதிப்பீட்டில் பெரியகுளம் புறம்போக்கு நிலத்தில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News