மீன்சுருட்டியில் பஞ்சாட்சர சாமிகள் குருபூஜை ஊரே திரண்டு வழிபாடு செய்த கிராம மக்கள் .
மீன்சுருட்டியில் பிரசித்தி பெற்ற 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சாட்சர சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.;
மீன்சுருட்டி,ஆக.13 - அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் பிரசித்தி பெற்ற சொக்கலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது . இக்கோவிலை 300 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாட்சர சாமிகள் என்பவர் கட்டி வழிபட்டார். மேலும் தன்னுடைய சித்திகள் மூலம் மீன்சுருட்டி பகுதி மக்களுக்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார் என்பது வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அவர் ஆடி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் அவர் ஜீவசமாதி அடைந்தார். இதனைப் போற்றும் விதமாக ஆண்டு தோறும் ஆடி மாதம் புரட்டாதி நட்சத்திரம் அன்று பஞ்சாட்சர சாமிகள் குருபூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற குருபூஜை விழாவில் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் இணைந்து பஞ்சாட்சர சாமிகள் சித்தர் பீடத்தில் குருபூஜை விழா நடத்தினர். முன்னதாக சொக்கலிங்கேஸ்வரருக்கு பால்,பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாசிலாமணி மற்றும் சாதுக்கள் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து திரளான சிவபக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரசினர் மேல்நிலைப்பள்ளி கட்டிடக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் அறங்காவலர் நித்தியானந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.