நாமக்கல்லில் எடப்பாடி வரவேற்பு பேனர்கள் கிழிப்பு ! -மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
அதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீ தேவி பி.எஸ். மோகன், சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரம் 100 க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளார்.இதில் சேலம் ரோட்டில் உள்ள வரவேற்பு பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து உள்ளனர்.;
நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை மர்மநபர்கள் கிழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 19, 20, மற்றும் 21ம் தேதி ஆகிய 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார சுற்றுப்பயணம் மூலம் பிரசாரம் செய்கிறார். 19ம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலத்திலும், 20ம் தேதி நாமக்கல், பரமத்திவேலூரிலும், 21ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். இதையொட்டி நாமக்கல்லில் அதிமுகவினர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். அதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன், சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரம் 100 க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளார்.இதில் சேலம் ரோட்டில் உள்ள வரவேற்பு பேனர்களை திங்கட்கிழமை இரவு சிலர் கிழித்துள்ளனர். இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக உட்கட்சி மோதலில் பிளக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டதா? அல்லது வேறு யாராவது கிழித்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.