நள்ளிரவில் கார், ஆட்டோக்கள் வீட்டு உபயோக பொருட்கள் சேதம்
கோவில்பட்டியில் வீடு தொடர்பான பிரச்சனையில் அடிதடி - கார், ஆட்டோக்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் - 3 பேரை தேடும் போலீசார்*;
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும் கிருஷ்ணா நகர் பகுதி சேர்ந்த சதீஷ் பாலாஜி என்பவருக்கும் இடையே வீரவாஞ்சி நகரில் உள்ள ஒரு வீடு தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலவில் உள்ளன. இந்த சூழ்நிலையில் பிரச்சனைக்குரிய அந்த வீட்டில் மாட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை நேற்று இரவு(செவ்வாய்க்கிழமை) கணபதி உடைத்து விட்டதாக கூறி சதீஷ் பாலாஜி மற்றும் சில நபர்கள் கணபதி வீட்டிற்கு சென்று ஆட்டோ, வாஷிங் மெஷின், கதவு ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் கணபதியின் உறவினர் வீரவாஞ்சி நகர் மூன்றாவது தெருவில் இருக்கும் கிருஷ்ணம்மாள் என்பவர் வீட்டிற்கும் சென்று ஆட்டோ மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற கிருஷ்ணம்மாள் மற்றும் அவரது சகோதரி கருப்பாயி அம்மாள் இருவரையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் பாலாஜி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.