பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயியுடன் கலந்துரையாடினார்.;

Update: 2025-09-24 11:48 GMT
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் 24 விவசாயிகள் நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ளனர். முதிர்ச்சி அடைந்த காய்களை நீக்கி சுத்தம் செய்து நல்ல தரமான விதைகளை விவசாயிகள் விதை பயன்பாட்டுக்காக தேர்வு செய்து வேளாண் விரிவாக்க மையத்திற்கு வழங்கினால், அந்த விதைகளுக்கு உள்ளூர் சந்தையில் கிடைக்கும் விலையைவிட தமிழ்நாடு அரசின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் விவசாயிகள் அதிக இலாபம் பெறலாம். நல்ல முளைப்புத் திறன் உள்ள விதைகளுக்கு கிலோவிற்கு ரூ.100/- கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. விதைப் பண்ணை அமைக்கத் தேவையான ஆதாரம், சான்று, நிலக்கடலை விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு உள்ளது. விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை உதவி இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு விதை பண்ணை அமைக்கலாம். அதனடிப்படையில், போக்கம்பாளையம் பகுதியில், வேளாண்மைத் துறையின் சார்பில் எஸ்.மயில்சாமி என்பவர் 2.53 ஏக்கர் பரப்பளவில் கிர்னார்-4 வகை நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ளதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, செயல்பாடுகள் குறித்து விவசாயியுடன் கலந்துரையாடினார். அப்போது, விவசாயி மயில்சாமி அவர்கள் இவ்விதைப்பண்ணை மூலம் சுமார் 2,000 கிலோ நிலக்கடலை உற்பத்தி செய்ய முடியும் எனவும், கொள்முதல் தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ.100/- வீதம் மொத்தம் ரூ.2.00 இலட்சம் வரை கிடைக்கும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் எலச்சிபாளையம் வட்டாரம் கூத்தம்பூண்டி பகுதியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார கட்டிடம் கட்டும் பணியினையும், சத்திநாய்க்கன்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.109.44 இலட்சம் மதிப்பீட்டில் கோவில்பாளையம் முதல் கல்லாங்காடு சாலை வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, எலச்சிபாளையம் ஒன்றியம், மேட்டுப்புதூர் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் வருகை, எடை, உயரம் உள்ளிட்ட விபரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும், கூத்தம்பூண்டி பகுதியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வுகளின்போது, வேளாண்மை இணை இயக்குநர் சு.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.ராமச்சந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News