நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாய்க்காலில் பாய்ந்த கார்
தந்தை, 2 குழந்தைகள் காயம்;
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கீழபருத்தியூரை சேர்ந்தவர் சக்திவேல் குமார் (43). இவர் ஆஷிகா (14) மற்றும் விஷ்ரூத் (3) ஆகிய 2 குழந்தைகளுடன், நேற்று (ஞாயிறு) தன் காரில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மீன் வாங்குவதற்காக வந்தார். மீன் வாங்கி விட்டு வீட்டிற்கு அவர் திரும்பி கொண்டிருந்தார். நாகை -திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கண்ணங்குடி பகுதியில் வந்தபோது, இடதுபுறம் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் நிலைத் தடுமாறிய கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இடதுபுறம் உள்ள வாய்க்காலில் பாய்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லேசான காயத்துடன் தப்பிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.