உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
இரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்துவீர் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் , வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்டு தகவல்.;
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் வேளாண்மை இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் திட்டங்களுக்கு ஏற்ப 50% அல்லது முழு மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது, நடப்பு ஆண்டில் 56 மெ.டன் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பயிர் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை, கட்டுப்படுத்த பெருமளவில் இரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை நன்மை செய்யும் பூச்சிகளை அழிப்பதுடன் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. எனவே, இரசாயன பூச்சிக்கொல்லியை தவிர்த்து ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் நோக்கில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் இதர நுண்ணுயிரிகளால் ஏற்படக்கூடிய நோய் தாக்குதலை கட்டுப்படுத்தக்கூடிய எதிர் உயிரி பூஞ்சாணமான டிரைக்கோடெர்மா விரிடி, எதிர் உயிரி பாக்டீரியாவான சூடோமோனாஸ் புளோரசன்ஸ் மற்றும் பேசில்லஸ் சப்டில்லிஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளாக மட்டுமல்லாமல் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடிய பயிர் ஊக்கியாகவும் செயல்படுகிறது. பயிர்களில் பிற தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் என்.பி. வைரஸ் மற்றும் முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. டிரைக்கோடெர்மா விரிடி என்னும் நன்மை செய்யும் பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதன் மூலமும் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் இடுவதன் வாயிலாக மண் மூலம் பரவும் நோய்களான வேர் அழுகல், நாற்றங்கால் அழுகல், வாடல் மற்றும் கிழங்கு அழுகல் நோய்களை கட்டுப்படுத்துகிறது. சூடோமோனாஸ் புளோரசன்ஸ் மற்றும் பேசில்லஸ் சப்டில்லிஸ் என்னும் பாக்டீரியா உயிரி கட்டுப்பாட்டு காரணிகளை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதன் மூலமும் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் இடுவதன் மூலம் பயிர்களில் ஏற்படக்கூடிய இலைக்கருகல், இலைப்புள்ளி, குலை நோய், துரு நோய், வாடல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. பருத்தி, சோளம், மக்காச்சோளம், துவரை, தக்காளி, வெண்டை, ஆமணக்கு போன்ற பயிர்களில் குறிப்பாக ஹெலிகோவர்பா கம்பளிப்பூச்சிகளை கட்டுப்படுத்த என்.பி. வைரஸ் பயன்படுத்தப்படுகிறது. இவை புழுக்களின் குடலில் உள்ள காரத்தன்மை வாய்ந்த புரதத்தை கரைத்து புழுக்களில் வைரஸ் தொற்றை ஏற்படுத்தி பயிர்களை பாதுகாக்கிறது. இவற்றை ஒரு ஏக்கருக்கு 100 மில்லி என்ற அளவில் பயன்படுத்தவேண்டும். கரும்பு, நெல், பருத்தி மற்றும் காய்கறி பயிர்களில் புழு தாக்குதலை கட்டுப்படுத்த டிரைகோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணி குழவியை பயன்படுத்தலாம். இது தனது முட்டையினை பயிர்களை தாக்கி சேதம் விளைவிக்கக்கூடிய பூச்சிகளின் முட்டையின் உள்ளே உள்ள கருக்களை உண்டு தனது முட்டையினை பயிர்களை தாக்கக்கூடிய பூச்சியின் முட்டைக்குள் செலுத்தி இனப்பெருக்கம் செய்வதன் மூலம் பூச்சிகளில் இருந்து பயிர்களைக்காக்கிறது. ஒரு ஏக்கர் பரப்பிற்கு பயிர்களுக்கு ஏற்ப 1 CC அல்லது 2 CC ஒட்டுண்ணி அட்டையினை காலை மற்றும் மாலை நேரங்களில் இலையின் அடிப்பகுதியில் கட்டவேண்டும். நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமின்றி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் போன்ற பிற மாவட்டங்களுக்கும் இலக்கின்படி அனுப்பப்படுகிறது. அந்த வகையில் நாளது தேதி வரை 25 மெ. டன் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உத்தேசமாக 8,000 விவசாயிகள் 10,000 எக்டர் பரப்பிற்கு திட்டத்திற்கேற்ப 50% அல்லது முழு மானியத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பெற்று பயனடைந்துள்ளனர். எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீமை விளைவிக்கும் இரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து நன்மை பயக்கும் பசுமை போராளியான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் சு.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.க. இராமச்சந்திரன் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.