வேதாரண்யம் கிளை நூலகத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர்
ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கணினி பிரிண்டர் வழங்கினார்;
நாகை மாவட்டம் வேதாரண்யம் கிளை நூலக பயன்பாட்டிற்கு, கணினி பிரிண்டர் வழங்கும் விழா வேளாங்கண்ணி கிளை நூலகத்தில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட நூலக அலுவலர் சுமதி தலைமை வகித்தார். வேளாங்கண்ணி கிளை நூலகர் தனசேகரன் முன்னிலை வகித்தார். செருதூர் கிளை நூலகர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். விழாவில், திமுக ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கணினி பிரிண்டரை நன்கொடையாக, வேதாரண்யம் கிளை நூலகர் அருள்மொழியிடம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது புத்தகங்கள் ஒரு மனிதனை மனிதநேயத்துடன் சமூகத்தில் வாழ வைக்கும் என்பதை உணர்ந்து, தற்போதைய தமிழ்நாடு அரசு பல்வேறு வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக, மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சிகள், இலக்கிய திருவிழாக்கள் என அடுத்த தலைமுறை புத்தக வாசிப்புடன் கூடிய சிறந்த தலைமுறையாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், வேதாரண்யம் கிளை நூலகத்திற்கு என்னால் இயன்றவரை உதவிட கணினி பிரிண்டர் ஒன்றை நன்கொடையாக வழங்கினேன். இதுபோன்று ஒவ்வொரு நூலகங்களுக்கும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள நன்கொடையாளர்கள் பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும். நூலகங்கள் வளர்ந்தால் சமூகம் சிறக்கும். இலக்கியம் படித்த மனிதன் மாமனிதன் ஆகிறான் என்று முன்னோர் சொல் உண்மையாகும். இவ்வாறு அவர் பேசினார்.. விழாவில், திருவாரூர் வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி சரவணன் வாழ்த்துரை வழங்கினார். விழாவை, கவிஞர் முருக பூபதி ஒருங்கிணைத்தார்.