நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!
நாமக்கல்லில் தீ விபத்துகளில் இருந்து பொதுமக்களையும், சொத்துகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்;
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் நாமக்கல்- பெரியப்பட்டி சாலையில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் "வாருங்கள் கற்றுக் கொள்வோம்" என்ற தலைப்பின் கீழ் பேரிடர்கால ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்வில் தீ விபத்துகளில் இருந்து பொதுமக்களையும், சொத்துக்களையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது, பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வது என தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொன்றாக விளக்கங்களுடன் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.பேரிடர்கால ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி சேலம் மண்டல தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை துணை இயக்குநர் கல்யாணகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ... தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது, மின்சாதன பொருட்கள் தீ பற்றி கொண்டால் எவ்வாறு அணைப்பது, வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது, தற்காத்து கொள்வது குறித்தும், தீயணைப்பான்களை எவ்வாறு கையாள்வது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள 374 தீயணைப்பு நிலையங்களில் ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது மேலும் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்தும், பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும் எனவும் சட்ட நடவடிக்கைகளை பொறுத்த வரைக்கும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ், நாமக்கல் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்கள் தே.ஆனந்த், ச.தவமணி மற்றும் நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.