எல்பிஜி டேங்கர் லாரி 'ஸ்டிரைக்' விரைந்து நடவடிக்கை எடுக்க ஆயில் நிறுவனங்களுக்கு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் டாக்டர்.பி.வி.செந்தில் கோரிக்கை
ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் இந்த புதிய முடிவை பரிசீலனை செய்து மத்திய அரசின் ஆயில் நிறுவனங்கள் கை விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் அதன் மாநில செய்தித் தொடர்பாளர் என்ற முறையிலும் எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன்.;
பல்லாயிரக்கணக்கான மக்களின், குடும்பங்களின் நிலைமையை பாதிக்கும் வகையிலான புதிய முடிவை கைவிட்டு, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசின் ஆயில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் மாநில செய்தித் தொடர்பாளர் டாக்டர் பி.வி.செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள டேங்கர் டெண்டரில், தகுதியான அனைத்து எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென் மண்டலம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 9ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளனர். இதில், 5,500க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் பங்கேற்கின்றன. இதன் காரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் கேஸ் மொத்தமாக புல்லட் டேங்கர்களில் எடுத்துச்சென்று, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பாட்லிங் மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.மூன்றாண்டுக்கு ஒருமுறை டெண்டர் மூலம் வாடகைக்கான விலைப்புள்ளியை ஆயில் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வழங்கி வருகின்றன. 2025-2030ம் ஆண்டுக் கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில், புதிய விதி முறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்த போது, கடந்த மார்ச்சில், புதிய விதிமுறைகளை தளர்த்தகோரி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 30ல் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப் பட்டதால், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட் டது. இந்நிலையில், 3,500 எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 கேஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களின் இந்த புதிய முடிவால் கிட்டத்தட்ட 700 எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பங்கள், லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என ஏறத்தாழ 5000க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர், இதுமட்டுமின்றி இந்த தொழிலை மறைமுகமாக நம்பியிருக்கும் லாரி பட்டறை உரிமையாளர்கள், பணியாளர்கள் என 5000 பேர் பாதிக்கப்படுவர்.மேலும், இந்த எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகமும் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மற்றும் கேரளா மாநிலங்களில் பாதிக்கும் அபாயம் உள்ளது.இப்படி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் இந்த புதிய முடிவை பரிசீலனை செய்து மத்திய அரசின் ஆயில் நிறுவனங்கள் கை விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் அதன் மாநில செய்தித் தொடர்பாளர் என்ற முறையிலும் எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.