உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு மற்றும் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தேர்வு செய்யப்பட்ட 830 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2025-10-13 15:18 GMT
நாமக்கல் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபம் மற்றும் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் சந்தை பேட்டை செங்குந்த திருமண மண்டபம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தேர்வு செய்யப்பட்ட 830 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 24 நகர்ப்புற மற்றும் 15 ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடந்த 15.07.2025 அன்று தொடங்கப்பட்டு 3 கட்டங்களாக நகர்ப்புறத்தில் 110-ம், கிராமப்புறத்தில் 118-ம் என மொத்தம் - 238 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளின் கீழ் மனுக்கள் பெறப்பட்டது. மேலும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூலம் 6,97,577 கையேடு மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பட்டியலிடப்பட்ட மனுக்கள், பட்டியலிடப்படாத மனுக்கள் என ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 69,900 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. எனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பாக நடைபெற ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்ட அனைத்துத் துறைச் சார்ந்த அலுவலர்களுக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டமானது வெற்றிகரமாக மக்களிடம் சென்றடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, இன்றைய தினம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 565 பயனாளிகளுக்கு ரூ.54.72 இலட்சம் மதிப்பீட்டிலும், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 265 பயனாளிகளுக்கு ரூ.76.55 இலட்சம் மதிப்பிட்டிலும் என மொத்தம் 830 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் தகுதியான அனைத்து மனுக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்“ முகாம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 15 வட்டாரங்களில் 45 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்களும் என மொத்தம் 48 முகாம்கள் நடத்தப்படுகிறது. சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், மருத்துவ வசதி குறைவாக உள்ள நகர்ப்புற பகுதிகளை தேர்ந்தெடுத்து வாரந்தோறும் சனிக்கிழமை/தகுந்த நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில், உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் மற்றும் இதர இரத்தப் பரிசோதனை, மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, காச நோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்படும். மேலும், சிறப்பு பொது நல மருத்துவம், பொது நல அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மன நலம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இயன்முறை மருத்துவம், இருதயநோய் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட 17 துறைகளை சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 158 பயனாளிகளுக்கும், வருவாய்த்துறை சார்பில் 181 பயனாளிகளுக்கும், மின்சாரத்துறை 158 பயனாளிகளுக்கும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 140 பயனாளிகளுக்கும், கூட்டுறவுத்துறை சார்பில் 98 பயனாளிகளுக்கும், வட்ட வழங்கல் துறை சார்பில் 50 பயனாளிகளுக்கும், சுகாதாரத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கும் என மொத்தம் 830 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டம் வட்டூர் ஏரியில் வனத்துறையின் சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கம் கீழ், பனை விதை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.கலைச்செல்வி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News