கரூர் சம்பவம்:உச்ச நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது,தமிழக அரசு எந்தெந்த இடத்தில் தவறு செய்திருக்கின்றார்கள் என்ற உண்மை வெளிக் கொண்டுவரப்படும்.! எல்.முருகன் பேட்டி

மதுரையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கிய சுற்றுப் பயணத்தின் தொடர்ச்சியாக, வருகிற அக்டோபர் 29-ம் தேதி நாமக்கல்லுக்கு வருகை தரவுள்ளார்.இந்த சுற்றுப்பயணம் தமிழக அரசை வீட்டுக்கு அனுப்பக்கூடிய சுற்றுப்பயணமாக இருக்கும்.;

Update: 2025-10-13 16:14 GMT
நாமக்கல் மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் / கட்சியின் முன்னாள் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே. மனோகரன் கடந்த வாரம் (30.09.2025) அன்று நாமக்கல்லில் மறைந்ததை அடுத்து, அவருக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல்லில் உள்ள கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட, பாஜக மத்திய தகவல்- ஒலிபரப்பு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன்,பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மூத்த நிர்வாகி கே.மனோகரன் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மனோகரன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன், நாமக்கல் மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக பாஜகவில் இணைந்து என்னையும் இந்த கட்சியில் இணைத்துக் கொண்டு, மக்கள் பணியாற்றியவர் மனோகரன் ஆவார். கட்சிப் பணியை சிறப்பாக ஆற்றி அதோடு மக்கள் பணியாற்றிய அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அவரது இறப்பு நமக்கு பெரும் இழப்பாக உள்ளது என்றும் நினைவஞ்சலி செலுத்தி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் நாமக்கல் வழக்கறிஞர் மனோகரன் ஆவார், அவரின் ஆன்மா சாந்தியடைய இன்று அனைவரும் பிரார்த்தனை செய்தோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர்....கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்த வழக்கு சிபிஐ விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கரூர் சம்பவத்தில் பல்வேறு உண்மைகள் புதைந்திருப்பதாக அந்த பகுதி மக்களை கூறுகின்றனர். அவற்றை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணை வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு அரசு, எதையோ மூடி மறைக்க முயற்சி செய்வதை சிபிஐ வெளிக்கொண்டு வரும் என்று மக்கள் நம்புகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களை திமுகவினர் மிரட்டுவதால்தான் சிபிஐ மாற்றப்பட்டுள்ளது தவெக வினர் பிரச்சாரம் செய்ய கேட்ட இடத்தை வழங்கியிருந்தால் 41 பேரை இழந்திருக்க மாட்டோம். கரூரில் தவெக கூட்டம் நடப்பதற்கு முன்பாகவே அந்த இடத்தில் ஏதோ அசம்பாவித சம்பவம் நடக்கும் என மக்களை பேசி இருக்கின்றார்கள்.காவல் துறை, உளவுத் துறைக்கு எவ்வளவு கூட்டம் வரும் என தெரிந்திருக்கிறது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள், ஒழுங்குபடுத்துவது, இடம் தேர்வு செய்வது காவல்துறை, தமிழக அரசின் பொறுப்பு. ஆனால், தமிழக அரசு, காவல்துறையினர் சரியாக செய்ய தவறியதால் தான் 41 பேரை இழந்துள்ளோம்.
உச்ச நீதிமன்றம் சரியான உத்தரவை பிற்பித்துள்ளது.தமிழக அரசு எந்தெந்த இடத்தில் தவறு செய்திருக்கின்றார்கள் என்ற உண்மை வெளிக் கொண்டுவரப்படும்.
மதுரையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கிய சுற்றுப் பயணத்தின் தொடர்ச்சியாக, வருகிற அக்டோபர் 29-ம் தேதி நாமக்கல்லுக்கு வருகை தரவுள்ளார். இந்த சுற்றுப்பயணம் தமிழக அரசை வீட்டுக்கு அனுப்பக்கூடிய சுற்றுப்பயணமாக இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவை வீட்டுக்கு அனுப்ப சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளோம்.இந்த பயணத்தின் போது, திமுகவின் தோல்வி, ஊழல், நிர்வாக திறமையின்மை, மக்களை ஏமாற்றும் செயல்களை மக்களிடத்தில் எடுத்து வைப்போம். அதுமட்டுமல்லாமல்,
மத்திய அரசின் 11 ஆண்டுகால பிரதமர் தலைமையில் செயல்படுத்தப்பட்ட மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தமிழ் கலாச்சாரம், பண்பாடு ,மொழி, இலக்கியம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் இந்த சுற்றுப்பயணம் தமிழக மக்களின் மிகப்பெரிய வரவேற்போடு நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் ஆசியோடு மதுரை வீரனாக யாத்திரையை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை திமுகவை வீட்டுக்கு அனுப்பும்.விசிகவினர் வழக்கறிஞரை தாக்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முருகன், விசிகவினர் பொறுப்பற்ற முறையில் குறைவாகத்தான் அடித்ததாக கூறுகின்றனர்.இவர்கள்தான் ஜனநாயகத்தை, தலித் மக்களை காப்பவர்களா ? திமுக ஆட்சியில் திமுக கூட்டணியினர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுப்படுவதை எவரும் தடுக்க முடியவில்லை. தமது கூட்டணி கட்சியினரை திமுகவால் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இருக்கிறதா என கேள்விகுறியாக உள்ளது. கூட்டணி கட்சியினர் என்பதால் தமிழ்நாடு அரசும் அவர்களுக்கு துணை போகின்றனர்.திமுக ஆட்சியில் தமிழகத்தில் வழக்கறிஞர்கள்,பெண்கள், தலித் உள்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை.தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.ஸ்டாலினை எதிர்த்தும், திமுகவை வீட்டுக்கு அனுப்பவும், திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தும் தமிழகம் போராட வேண்டும் என்றும் நாமக்கல்லில் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன், நகர பாஜக தலைவர் தினேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News